Wednesday, June 4, 2008

ஜெயமோகனின் தேர்வு -பகிர்வும்,பதிலும்…



http://jeyamohan.in/?p=488

எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்தில் வெளியிடப் பட்ட ‘தேர்வு’என்ற கட்டுரைக்கு
என் பகிர்வும் ,அதற்கான ஜெயமோகனின் பதிலும்….

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு…

வணக்கங்கள்..தங்களுடைய வலைப் பதிவில் தேர்வு என்ற கட்டுரைப் படித்தேன்…
மிகவும் நின்று நிதானித்து படித்ததில் நம் அனைவரின் வாழ்க்கையும் அஜிதனில் அடங்கியுள்ளது என உணர்ந்தேன்…

உண்மைதான். எதற்கும் பதட்டப் பட்டு திரிவதன் விளைவு குழந்தைகளின் மீது சிறு அக்கறைக் கூட பாராட்ட முடியாத அவலத்திற்கு நாம் உள்ளாகி இருக்கிறோம்..

தங்கள் பதிவில் உள்ள சிறுபான்மையினர் கல்விக் கூடங்கள் குறித்த தங்கள் அவதானிப்பில் நான் முரண்பாடு கொள்கிறேன்..கல்வி என்பது எங்கோ மாய உலகில் மறைந்து கிடக்கும் அதிசயமாய் மறைத்து வைக்கப் பட்டிருந்த காலத்தில் …ஊரின் ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்த சேரிகளில் வெண்ணிற ஆடைகளோடு நுழைந்து கல்வி அளித்து, சுகாதாரம் போதித்து, மருத்துவம் தந்தது பாதிரிமார்கள்தான்.அவர்களுடைய நோக்கம் தங்கள் மதத்தை பரப்ப சேவையை கருவியாக பயன்படுத்துவதாக இருக்கலாம்..அதனாலென்ன…எந்த மதம் இறந்தால் என்ன..? எந்த மதம் பிறந்தாலென்ன..?

சூத்திரன் நாவிற்குள் பைபிளால் சரஸ்வதி அமர்ந்ததுதான் அதில் நடந்த நன்மை..

மற்ற படி அஜிதன் எதிர்கொண்ட சிக்கலான வாழ்வியல் முரண்கள் -எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது..எந்த ஆசிரியரும் மாணவனை மனிதனாகக் கூட நினைப்பதில்லை..அவர்களுக்கு தங்கள் பணி குறித்து இருக்க வேண்டிய நியாயமான அக்கறை இல்லை..அடித்தால்…அவமதித்தால் தரையில் கிடப்பதைக் கூட மாணவன் தலையில் ஏற்றி வைத்துக் கொள்வான் என்று நினைத்துக் கொள்வார்கள் போல..

தங்களுடைய பதிவு எனக்கு சமீபத்தில் வெளிவந்த அமீர்கானின் தாரே ஜமீன் தார் என்ற திரைப் படத்தை நினைவுப் படுத்தியது…







நம் நாட்டு குழந்தைகளுக்கான கல்வி முறை மாற்றி அமைக்கப் பட வேண்டும் என்பதான தங்களுடைய அக்கறையில் நானும் பங்கேற்கிறேன்….

எனது 4 வயது மகனை என் மனைவி பள்ளிக்கு அனுப்பும் போது போர்க் களத்திற்கு செல்லும் மான் போல தயார்ப் படுத்தி அனுப்பவது எனக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கும் செயலாகவே தெரிகிறது.ஏனென்றால் அவன் டாக்டராகணுமாம்…சொல்லி சொல்லி வளர்க்கிறாள் என் மனைவி.
என் குழந்தை ஒரு டாக்டராகவோ, ஒரு பொறியாளராகவோ ஆக்க எனக்கு துளி கூட விருப்பமில்லை என என் மனைவியுடன் சண்டை போட்டு இருக்கிறேன்..

பிறகு என்னதாண்டா அவனை செய்ய போற..? என்று கோபமாய் கேட்ட என் தந்தையை பார்த்து அவனுக்கு சினிமா பிடித்திருக்கிறது..அதனால அவன நடிகனாக்கப் போறேன் என்று வெறுப்பாய் பேசி விட்டு வந்திருக்கிறேன்…

என்ன உலகம் இது…

ஒழுங்கமைவுகள் என்பதன் பேரில் குழந்தைகள் மீது அறிவிக்கப் படாத ஒரு யுத்தத்தையே ஏற்படுத்தி இருக்கிறது இந்த கல்வியும் சமூகமும்…

இங்கு எந்த குழந்தைக்கும் ஓடி ஆட அனுமதி இல்லை…காலில் இறுக்கிக் கட்டிய காலணிகளோடு…கழுத்தில் இறுக்கும் டைகளோடு..பொங்கி வழியும் புத்தகங்களோடு ..வானுயர்ந்த மதில்களை உடைய கல்விக் கூடம் என்ற சிறையில் அடைக்க அவர்களை அழைத்து போக போலீஸ் வேன் போல ஒரு வேன்…

எல்லாக் குழந்தைகளின் உதடுகளிலும் புன்னகை இறந்து கிடக்கிறது…

ஏதாவது செய்து …இந்த குழந்தைகளின் மகிழ்வை,பால்யத்தை மீட்டே ஆக வேண்டும்….

என் துயரத்திற்கான ஆறுதல்- அஜிதனின் வெற்றியும், மதிப்பெண்ணும்…

அந்த வகையில் எளிமையாய் படித்து, வலிமையாய் தேர்ந்த அஜிதனுக்கு என் வாழ்த்துக்களும் …பாரட்டுகளும்….

தங்கள் ..
மணி.செந்தில்குமார்,
வழக்கறிஞர்.
கும்பகோணம்.

இந்த கடிதத்திற்கு திரு.ஜெயமோகனின் பதில்:

அன்புள்ள மணி செந்தில் அவர்களுக்கு,
நாம் நம் குழந்தைகளை 'வளர்க்க' முடியாது. அவர்களுடன் சிலவற்றை பகிர்துகொள்ள மட்டுமே முடியும். நாம் அவர்களை பொருட்படுத்தி , அவர்களின் உற்சாகமானதும் நம்பிக்கை நிறைந்ததுமான உலகை சிதைக்காமல் அதே உற்சாகத்துடன் ஈடுபட்டுச் சொலும் எதையும் வர்கள் கேட்பார்கள் என்றுதான் நான் எண்ணிகிறேன். இன்னொருவரின் கனவை வாழும்படி ஒருவரை நிர்பந்திப்பது கொடுமையானது.
தங்கள் கடிதம் கண்டேன். ஒரே வகையான அனுபவங்கள் வழியாக கடந்து சென்றுகொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் இப்போது கடிதங்கள் வழியாக உருவாகியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதில் எப்படி நுண் உணர்வுகளை அவித்து விட்டு போட்டி உலகின் சவால்களை எதிர்கொள்வதெ என்பதே அது. ஒரு சமன்பாட்டைக் கண்டுகொள்கிறவர்களே ஏதாவது சொல்லும் இடத்தில் இருக்கிறார்கள். போட்டி உலகை மாற்றுவதென்பது உடனடியாக நம் கையில் இல்லை. ஆனால் இந்த சமரசம் வலியும் வதையும் கூடியதாக இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதே முக்கியமானதக இருக்கிறது. அதற்கு அடிபப்டையில் இலக்குக்காக எதையும் செய்யும் நோக்கை சற்றே விலக்கி அன்பின் அடிப்படையில் நம் குழந்தைகலுடன் உரையாட முனைந்தாலே போதும் . நான் எந்த கொள்கைகளையும் இது சார்ந்து முன்வைக்க மாட்டேன், குழந்தைகளுடன் உரையாடுங்கள் என்பதைத் தவிர

ஜெயமோகன்

தோழர்களே….
குழந்தைகளின் கல்வியும் ,அதனைச் சார்ந்த அனைத்து விஷயங்களும் இந்தக் காலக் கட்டத்தில் மிகவும் சிக்கலாகி வருகின்றன..
நம் நாட்டு கல்வி அமைப்பையும், அதனைச் சார்ந்த நிறுவனக் கோட்பாடுகளையும் நாம் மறுபரீசிலனை செய்து தீர வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்…

0 comments: