Monday, June 2, 2008

கலைஞர்-85


எனக்கு ஆரம்பம் முதலே கலைஞர் மீது தீராத வெறுப்பும் ,வன்மமும் இருந்து வருகிறது.

எதிர் கட்சியாக இருக்கும் காலத்தில் எட்டி பாய்ந்து ஈட்டி எறியும் கலைஞர்… ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காலங்களில் முனை மழுங்கி அமைதி காப்பது…

இன்னும் ஈழப் போராட்டத்தை தமிழினத்தின் மூத்த ஆளுமை என்கிற முறைமையில் முன்னெடுத்து செல்லாதது…

பார்ப்பன ,பண்டார பாஜகவோடு பெரியாரை சுமந்துக் கொண்டு கூட்டணி வைத்தது….
தமிழுணர்வையும்..தமிழின மேன்மையையும் நசுக்கும் காங்கிரஸின் காதலுக்காக …ஒகேனக்கலை ஒத்தி போட்டது…

அடிக்கடி ராஜ தந்திரம் என்ற போர்வையில் கூடா நட்பும், வழுக்கும் வாதுரையும் முன் வைப்பது…

இன்னும் நிறைய …நினைக்க …நினைக்க ..சுரக்கிறது…

எல்லாம் சரிதான்..

இருந்தும்..அந்த நள்ளிரவு கைதின் போது…என் குடும்பத்து மூதாதையை காக்கிக் கரங்கள் இழுத்துச் சென்றது போல…இன்று நினைத்தாலும் …உடல் நடுங்குகிறது….

காரணம் மிக எளிது…

தமிழகத்தின் குக்கிராமத்தில் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட குலத்தில் தோன்றி..பெரியார் ,அண்ணா என்ற பரம்பரையின் நீட்சியாய்,நினைவின் தொடர்ச்சியாய் இருக்கின்ற இருப்பு..

இன்னும் தொலைக்காட்சியில் தமிழ் கவிதை பாடி தன்னை தமிழ் கவிஞராக காட்டிக் கொள்ளும் ஆர்வம்… …

அதிகாலையில் துவங்கி நள்ளிரவு வரைக்கும் பணிபுரிந்தாலும்…புத்தகங்களை வாசித்தும்,நேசித்தும் இருந்து வருகிற வாழ்க்கை…

பாலம் கட்ட ராமன் என்ன இன்ஞ்சினீயரா …என்று கேட்கும் பெரியார் திமிர்.
இறந்த சகோதரன் தமிழ் செல்வனுக்காக -உள்ளே துடிக்கும் ரத்த பந்தத்தின் விளைவாய்…பொத்துக் கொண்டு பொங்கிய கவிதை….

முதுமையின் வெளியில்..துவளாமல்..சுருங்காமல் …கடிதம் வழியாய் முரசொலி அடிக்கிற கம்பீரம்…
நம்மை உயர்த்திய தந்தை பெரியாரை தனது ஆளுமையாக முன் வைக்கும் பற்று..

இன்னும் எழுதுவது…குத்தலும் ….கொள்ளலுமாக தமிழ் மொழியை தனதாக்கி கொண்டு எதிரிகளை நிர்மூலப் படுத்துவது ……

இன்னும்..இன்னும்..பிற.

நான் இந்த தமிழ் மண்ணில் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாக்க விரும்பும் ஆளுமையாகவும்…ரகசியமாகவேனும் நேசிக்க விரும்பும் ஆளுமையாகவும் அவரே இருக்கிறார்.


தமிழ் அரசியல் வரலாற்றின் எஞ்சும் பெருமிதமாக கலைஞரே நம் முன்னால் காணக் கிடைக்கிறார்..

உலகம் முழுக்க பரவிக் கிடக்கும் தமிழினத்தின் மூத்த ஆளுமை …
கலைஞரிடம் விமர்சனம் செய்ய ஏராளம் இருக்கின்றன..

நாம் உரிமையாய் கோபித்துக் கொள்ளவும், சண்டைப் போடவும்,,ஏக வசனத்தில் ஏசவும்
அவரிடம் ஏராளம் இருக்கின்றன…..

முரண்படவும் …முட்டித் தள்ளவும்…இன்னும் நிறைய இருக்கின்றன நெஞ்சில்…
இருந்தும்…அந்த கிழவனுக்கு ஒன்று என்றால்…மனம் அடித்துக் கொள்கிறது…

தமிழ்க் கிழவா……

நாங்கள் ஊடல் கொள்ளவும்,சண்டை போடவும், என்றும் நீங்கள் எங்களுக்கு வேண்டும்..

தமிழ் பேச….கவிதை தேட…காவியம் இயற்ற…கண்ணகி பாட ….பெரியார் பேச …என அனைத்துமாய் எங்களுக்கு நீங்கள் வேண்டும்…

கலைஞர் வாழ்க.
நலமாய்…களமாய்..
………………………
……………………………

நிறைய விமர்சனங்களோடும்…
நிறைய வாழ்த்துகளோடும்…

மணி.செந்தில்குமார்

0 comments: