Sunday, March 23, 2008

என் கவிதைகள்...

*


இன்னும் ஈரம் குலையாத
வண்ணத் தூரிகையில்
இருந்து
சொட்டிக்கொண்டே இருக்கின்றன...
வரையப் படாத என் ஓவியங்கள்...

*

அறியப் படாத பின்னிரவுகஆளில்
வெளிர் நீலமாய் கசியும்
என் கனவுகளை மிரட்டி
துரத்துகின்றன தெரு
நாய்களின் ஓலங்கள்...

*

விடியலின் பிளிறலில்
மிரண்டு ஓடும்
விட்டில்கள்.....

*

நீ விசி எறிந்த
எனக்கான
ப்ரத்யோக பார்வையை
உலர்ந்த சருகுகளிடயே
சப்தமிடாமல் நான் தேடிய
அந்த மஞ்சள் மாலைப்
பொழுதில்........
என்னைக் கடந்து எத்தனை
பட்டாம்பூச்சிகள் பறந்து
சென்றன என்பதற்கான
கணக்கில் நினைவில்
நின்றவை தவிர
மறந்துப் போன
சில உதிரிகளைக் குறித்து
எனது பெரும் கவலை
இருந்தது என்பது பற்றி
நீ ஏதும் அறிவாயா..?

*

ஆங்காங்கே இடப்பட்ட
புள்ளிகளில் யூகிக்க
முடியாமல் திணறுகிறேன்
ஒரு அழகிய கோலாத்தை....

*

**********************************************************************************


பிரிவிற்கான மொழி...
-------------------

மிக நெருங்கிய தருணத்தில்
ஒரு வியர்வைத்துளியின்
இடைவெளியில் மெல்ல
விலகி விட்டோம் நாம்....

எதிரெதிர் திசைகளில்
நகரும் ரயில் பெட்டிகளில்
எது நகருகிறது....?

நிகழ்தகவுகளாய் வர்ணம்
மாறிய மனதின் மெளனத்தை
பேச முடியுமா உன்னால்...?

இயல்பு மீறிய ஒரு
சலனத்திற்காக
இருவருமே அமைதியாய்
காத்திருக்கிறோம்....

பிரிவுகளின் உலர்ந்த
காரணங்களுக்கான
பிரத்யோக மொழிகளை
சொல்வதற்கு உதடுகள்
தங்களை ஈரப் படுத்திக்
கொள்கின்றன...

ஏதாவது ஒரு உடைபடாத
நொடியில் உடையலாம்
நம் பிரிவிற்கான
உறவு....

நீண்ட மெளனங்களின்
கருத்த வராண்டாக்களில்
தளர்ந்து நடக்கிறது....
நம்மை மீறி கொப்புளிக்க
துடித்த நம் முதல்
துளிர்த்தலுக்கான நினைவு....

மிடறு விழுங்கினாலும்
மீறி வர எத்தனிக்கும்
நம் அரிதாரத்தை காட்டும்
அளவுக்கு மீறிய ஓப்பனை...

நொடிகள் கடந்தாலும்
நம்மை கடக்காமல்
நிற்கிறது இந்த
இமைக்காத பொழுது....

சில பெருமூச்செறிதல்களுக்கு
பிறகு...


சின்னப் புன்னகையோடும்
மென்மை கைக் குலுக்கலோடும்
துவங்கிறது...

நம் பிரிவிற்கான மொழி.



**********************************************************************************


சொல்லின் சொல்....
------------------

நம் உரையாடலில்
ஒரு கண உமிழலில்
பிறப்பெடுக்கப் போகும்
எனது அடுத்த சொல்
விசேடமானது....

நான் உதிர்க்கும் இறுதி
சொல்லாக அது இருக்கலாம்...
அல்லது நீங்கள் கேட்கும்
கடைசிச் சொல்லாக கூட
இது அமையலாம்....

ஏற்கனவே நான்
காற்றில் விதைத்துப் போன
சொற்களின் தொடர்வாய்
இது நிகழலாம்...

ஒரு கண உமிழலில்
காலங் காலமாய் கட்டி
வைக்கப் பட்டிருந்த
கோட்டைக் கொத்தளங்களை
சரிக்கும் உளியாக கூட இது
இருக்க்கலாம்..

ஆதிக்கத்திற்கு எதிரான தோட்டாவாக
அது வெடிக்கலாம்...

அல்லது

மெளனமாய் இறந்தவனின்
கல்லறையில் ஒரு
உதிரிப் பூவாகக் கூட
அது கிடக்கலாம்....

ஆனால் அந்த சொல்லின்
கரைசலின் மீதத்தில்
நான் இருப்பேன் என்பதை
இப்போதைக்கு
உறுதியாய் சொல்ல முடியும்.
**********************************************************************************

0 comments: